லஞ்சம் என்ற வார்த்தையைச் சொன்னாலே நினைவுக்கு வரும் பல துறைகள் இருக்க, எடுத்தவுடன் மின்சார வாரியம் என்று கூறுகிறேனே என்று யோசிக்காதீர்கள். என்னைப் பொருத்தவரை லஞ்சம் எவ்வளவு வாங்கப்படுகிறது என்பது எப்படி முக்கியமோ அப்படித்தான் எந்த வழியில் வாங்கப்படுகிறது என்பதும்.
நாம் லஞ்சம் தான் கொடுக்கிறோம் என்பது தெரியாமலே நம்மில் 99% சதவிகிதம் பேர் மின்சார வாரியத்தில் வேலை செய்பவருக்கு லஞ்சம் கொடுத்து வருகிறோம் தெரியுமா? மீதி 1% எப்படி தப்பித்தார்கள் என்பதை கடைசியில் விளக்குகிறேன்.
முதலில் மின் வாரியத்தில் நாம் எப்படி நம்மையறியாமல் லஞ்சம் கொடுக்கிறோம் என்று பார்ப்போம். ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார கணகீட்டு அளவைக் குறிக்க ஒரு அட்டை கொடுப்பார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளாக (சுமார் 20 - 25 வருடமாக) அந்த அட்டையின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது. அதில் ஒரு வருடத்திற்கான அளவுகளை குறிக்க ஏதுவாக 12 வரிகள் மட்டுமே இருக்கும். இது ஏறக்குறைய இரு அஞ்சல் அட்டை அளவு தான் இருக்குமென்பதால் இதை அச்சடிக்க 2 ரூபாயோ அல்லது 3 ரூபாயோ ஆகக் கூடும். (அது எவ்வளவு ஆனால் என்ன?) ஆனால் இதை மின்சார வாரியம் இலவசமாக அச்சிட்டுக் கொடுக்கிறது. (அப்படித்தான் சொல்கிறார்கள்.) ஆனால் நான் முன்பே சொன்னது போல் எனக்கு நினைவு தெரிந்த நாளாக ஒவ்வொரு வருடமும் புதிய அட்டை போடுவதற்கு கணக்கு எடுக்க வருபவரிடம் காசு (அப்போது ரூ.2 - இப்போது ரூ.5) கொடுத்தால் தான் புதிய அட்டை கொடுப்பார். இல்லையென்றால் பழைய அட்டையில் மூலை முடுக்கெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். இந்த மாத கணக்கை எங்கே எழுதியிருக்கிறார் என்று நாம் கண்டு பிடிப்பதற்குள் மண்டை தீய்ந்து விடும். இதற்கு பயந்து கொண்டே அனைவரும் காசு போனால் போகிறது என்று கொடுத்து புது அட்டை வாங்கி விடுவார்கள். இதுதான் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் கணக்கெடுக்கும் கணக்காளருக்கு ஏறக்குறைய ரூ.5000 வரை (அதாவது 1000 வீடுகளில் ரூ.5) கிடைக்கும். இந்த லஞ்சம் (அப்படிச் சொல்லக் கூடாது - அது கார்டு அளிக்க சேவைக் கட்டணம்) தமிழகம் முழுவதும் பெறப்படுகிறது. ஆனால் நாமும் இதை லஞ்சமாக நினைப்பதே இல்லை என்பது தான் உண்மை. இப்படி காலங்காலமாக நாமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம், அவர்களும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரசாங்கம் இலவசமாக கொடுக்கச் சொல்லி கொடுப்பதை இவர்கள் காசாக்கிக் கொள்கிறார்கள்.
இதனை நிறுத்த வழியே இல்லையா என்றால், இருக்கிறது. அஞ்சல் அட்டையை அரசாங்கம் 50 பைசா என்று விலைக்கு விற்பது போல் இந்த கார்டுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்கலாமே. அப்போது எல்லோரும் ஒழுங்காக அந்த விலை கொடுத்து வாங்குவார்கள் அல்லவா? எங்கு இலவசம் கொடுக்கப்படுகிறதோ அங்கு லஞ்சம் ஆரம்பமாகிறது என்பது இதன் மூலம் தெரிகிறதல்லவா. அரசாங்கம் அந்த கார்டின் விலையை ரூ.1 என்றோ அல்லது ரூ.2 என்றோ விலை நிர்ணயம் செய்தால் உண்மையில் நமக்கு லாபம் தானே ஒழிய நஷ்டம் இல்லை. ஏனென்றால் ரூ.5 லஞ்சமாக கொடுப்பதை விட ரூ. 2 கொடுத்து நாம் உரிமையோடு வாங்கலாமே.
உண்மையில் நாம் ரூ.5 வரை லஞ்சம் கொடுத்து கார்டு கேட்டாலும் அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க மாட்டார்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பழைய அட்டையில் எல்லாப் பக்கத்திலும் கிறுக்குவார்கள். அப்போதுதானே நாம் லஞ்சம் கொடுத்தாலும் பரவாயில்லை என்று நினைப்போம். இப்படி நாம் காசையும் கொடுத்து அவர்களிடம் கார்டுக்கும் மன்றாட வேண்டும். இலவசம் எப்படி லஞ்சத்தை வளர்ப்பதோடு அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அரசுத்துறையினரின் அராஜக போக்கிற்கும் வழி வகுக்கிறது பார்த்தீர்களா?
ஆனால் இந்த லஞ்சத்தை ஒழிக்கும் எண்ணம் ஏனோ மின்துறை அமைச்சருக்கும் அத்துறை உயர் அதிகாரிகளுக்கும் இது வரை எழவில்லை. ஒருவேளை அவர்கள் விரும்பினாலும் அத்துறையில் பலம் பொருந்தியதாக இருக்கும் தொழிற்சங்கங்கள் இதை எதிர்க்கின்றனவோ என்னவோ? (ஊழியர் நலம் விரும்பிகள் அல்லவா அவர்கள்)
அப்புறம் முதலில் சொன்ன விஷயத்திற்கு வருவோம். அதாவது மீதம் உள்ள 1% சதவிகிதம் பேர் எப்படி காசு கொடுக்காமல் அட்டை பெறுகிறார்கள் என்று. அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதற்கு நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவரோ, நண்பரோ, உறவினரோ மின் வாரியத்தில் வேலை செய்தால் போதும்.