Saturday, August 20, 2011

ரூபாய் குறியீட்டுடன் புதிய இரண்டு ரூபாய் நாணயம்: குழப்பமே மிச்சம்

இந்திய ரூபாய் குறியீட்டுடன் வெளியாகியுள்ள இரண்டு ரூபாய் நாணயம், ஒரு ரூபாய் நாணயத்தைப் போலவே இருப்பதால், பெரும் குழப்பமே மிச்சமாகியுள்ளது.

இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுடன் வெளியாகியுள்ள இரண்டு ரூபாய் நாணயத்தின் முன்பக்கம் சிங்கமுகம் உள்ளது. பின்பக்கம் புதிய குறியீட்டுடன் எண்ணால் 2 என அச்சடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரூபாய் நாணயத்தின் முன்பக்கமும், ஒரு ரூபாய் நாணயத்தின் முன்பக்கமும் ஒரே மாதிரியாக உள்ளது. பழைய ஒரு ரூபாய் மற்றும் இந்த புதிய இரண்டு ரூபாய் நாணயத்தின் வடிவ அளவு மற்றும் எடை ஒரு மாதிரி இருப்பதால் பொருட்கள் வாங்கும் போதும், சில்லரை மாற்றும் போதும், பலர் இரண்டு ரூபாயை, ஒரு ரூபாய் என நினைத்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

சராசரி மனிதர்களே புதிய இரண்டு ரூபாய் நாணயத்தை கையாள்வதில் ஏமாற்றமடைந்து வரும் நிலையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இந்த நாணயத்தை கையாள்வதில், பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

பார்த்தவுடன் சாதாரண மனிதனுக்குக் கூட புரியக்கூடிய இந்த குறைபாடு, இந்த நாணயத்திற்கு அங்கீகாரம் கொடுத்த அதிபுத்திசாலிகளுக்கு ஏன் விளங்கவில்லையோ? ஒரு வேளை இந்த நாணயத்திற்கு அனுமதி கொடுக்கும் நிலையில் இருந்த அனைவரும், ரோபோட்கள் போல் அபார அறிவு படைத்தவர்களோ என்னவோ. உண்மையில் ரோபோட்டுகள் கூட அவற்றை அடையாளம் காட்டும் போது அதிக முறை தவறே செய்யும்.

இந்த நாணயத்திற்கு அனுமதி கொடுத்ததின் மூலம் அதிகாரிகள் ஒன்றை விளங்க வைத்துவிட்டார்கள். அதாவது அரசு வேலையில் சேர்ந்ததும், மூளைக்கு ஓய்வு கொடுத்து விடும் பெருவாரியான அதிகாரிகளின் ஒரு அங்கம் தான் தாங்களும் என்று நிரூபித்து விட்டார்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் பாராட்ட வேண்டும். உண்மையாக உழைக்கக் கூடிய சிறு எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டே, இந்த நாட்டு நடப்பு ஓடிக் கொண்டுதானே இருக்கிறது.

அதிகாரிகளையும் சொல்லி குற்றமில்லை, அவர்களில் பெரும்போலோர் அரசியல்வாதிகளுக்கு 'ஆமாம் சாமி' போடும் ஆட்டு மந்தைகளாகத்தானே இருக்கிறார்கள். அமைச்சர் 'காக்கா கருப்பு' என்றால் இவர்களும் 'கருப்பு' என்பார்கள், 'வெள்ளை' என்றால் 'வெள்ளை' என்பார்கள்.

அப்படி சொல்லமல் ஒரு அதிகாரியாவது துணிந்து அமைச்சரிடமோ, அல்லது உயர் அதிகாரியிடமோ உண்மையைச் சொல்லியிருந்தால் இந்த நாணயம் வெளிவந்திருக்குமா?

வாழ்க நிதியமைச்சர்! வாழ்க நிதித்துறை அதிகாரிகள்! வாழ்க ரிசர்வ் வங்கி!

Tuesday, April 12, 2011

ஆனந்த விகடனில் வெளியான எனது சிறுகதை

நிஜமாகா நிழல்கள்

'தம்பா'

(ஆனந்த விகடன் - 30-06-2002 - பக்கம் 88-93)

முன்குறிப்பு : இந்தக் கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இது எச்சரிக்கை அல்ல. உண்மையில் நடக்காதா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு...

நடந்து முடிந்த தேர்தலில் என்னுடைய கட்சி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. சென்ற முறை மந்திரி பதவியில் இருந்தவர்களில் ஊழல் வழக்குகளில் சிக்காமல் நல்ல மந்திரியெனப் பெயரெடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆகவே இந்த முறையும் எனக்கு மந்திரி பதவி நிச்சயம். சென்ற முறை வகித்த கதர்த்துறையைக் காட்டிலும் நல்லதுறை கண்டிப்பாகக் கிடைக்கும் என நினைக்கிறேன். தேர்தல் முடிவு தெரிந்ததும் தலைவரைப் பார்த்து ஆசி பெற்றேன். பதிலுக்குப் புன்னகையை மட்டும் சிந்திய தலைவர், வேறு எதுவும் பேசவில்லை. நாளை மறுநாள் மந்திரிசபை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மந்திரிகள் பட்டியல் பதவியேற்பு விழாவுக்கு சற்று முன்தான் தெரியும் என நினைக்கிறேன். இலாக்காக்கள் அன்று மாலைதான் முடிவாகும். இரண்டு நாளில் நான் மந்திரியாகிவிடுவேன். அந்த இரண்டு நாள் போவதுதான் இரண்டு யுகம் போவது போல் இருக்கும். சுகமான எதிர்பார்ப்பு.

நான் எதிர்பார்த்த அழைப்பு வந்துவிட்டது. தலைவரே போன் மூலம் அழைப்புவிடுத்ததை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மளமளவென்று விழா முடிந்தது. கவர்னருடன் போட்டோ எடுத்துக் கொண்டதும் அனைவரும் கிளம்பினோம். நான் சற்றும் எதிர்பாராத வருவாய்த் துறையை ஒதுக்கியிருந்தார் தலைவர். மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மாலையே இலாகா பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். பின்னர் தலைவரை அவரது வீட்டில் சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அமரச் சொல்லி காபி சாப்பிடச் சொன்னார். பின்னர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “உங்களுக்கு வருவாய்த்துறையை ஒதுக்கியதற்குக் காரணமே நீங்கள் ஊழல் எதிலும் சிக்காததுதான். அதேபோல, இந்த முறையும் பார்த்துக் கொள்ளுங்கள். சென்ற முறை நீங்கள் அதிகம் பேருக்குப் பல துறைகளில் சிபாரிசு செய்ததாகக் கேள்விப் பட்டேன் - முக்கியமாக உங்கள் சாதியினருக்கு. இந்த முறை அதைக் கட்டுபடுத்தினால் நன்றாக இருக்கும். தொடர்நது நல்ல முறையில் செயல்பட என் வாழ்த்துக்கள்.” சுருக்கமாக ஆனால், சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

காரில் வரும்போது அவர் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். நூற்றுக்கு நூறு சரி. சென்ற முறை நான் என் சாதியினரிடத்தில் சற்று தாராளமாகத்தான் இருந்துவிட்டேன். அமைச்சர் என்பவர் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்பதை ஏனோ அப்போது உணரவில்லை. ஆனால் அப்போது எனக்கு மந்திரி பதவியே அந்த சாதி அடிப்படையில்தானே வந்தது. அதனால்தான் அவ்வாறு நடந்து கொண்டேன். நான் செய்தது சரியா... தவறா? தெரியவில்லை! எது எப்படியிருப்பினும், இந்த முறை என் தகுதியின் அடிப்படையில்தான் மந்திரி பதவி கிடைத்துள்ளது. ஆகவே தலைவர் சொன்னபடி ஊழல் எதுவும் செய்யாமல், சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு யாருக்காகவும் எதற்காகவும் சிபாரிசு எதுவும் செய்யாமல் தூய்மையாக நடந்து கொள்ளவேண்டும். இதை எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நானே உறுதிசெய்து கொண்டேன்.

சாமர்த்தியமாக ஊழல் செய்வது, பலருக்கும் சிபாரிசு செய்வது, கட்சிக்காரர்கள் மற்றும் சாதிக்காரர்களை மகிழிவிக்கும் செயல்களைச் செய்வது - இந்த மூன்றையும் செய்வதைவிட செய்யாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே தெரிந்துகொண்டேன். கடந்த மூன்று மாதங்களாக இந்த மூன்றையும் செய்யாமல் நான் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டதால், சக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சிக்காரர்கள், சாதிக்காரர்கள் என அனைவரின் வெறுப்பையும் ஒருசேர சம்பாதித்துவிட்டேன். இருந்தாலும் என் கொள்கையில் விடாப்பிடியாக தொடர்ந்து இருப்பது என்று முடிவுடன் செயல்பட்டேன்.

மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தபோது வயதான முதியவர் ஒருவரும் இளைஞனும் நின்றிருந்தார்கள். பார்த்தவுடன் தெரிந்தது - சிபாரிசுக்காக வந்திருக்கிறார்கள். முதியவரை எங்கோ பார்த்த நினைவு. அவர்களைக் காக்க வைக்க விரும்பாமல் உடனே உள்ளே வரச் சொன்னேன். வந்தார்கள். இருக்கையைக் காட்டி அமரச் சொன்னேன். சற்றே மரியாதையுடன் அமர்ந்தார்கள். “என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே?” என்றேன். முதியவர் பதில் சொன்னார். “சார், நான் முதுகுளத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன். பெயர் காத்தமுத்து. இது என் மகன் இளஞ்செழியன். எம்.ஏ., எம்.·பில். படித்திருக்கிறான். கல்லூரி ஆசிரியர் தேர்வு எழுதி நேர்முகத்தேர்வுக்கு தேர்வாகியுள்ளான். நீங்கள் மனது வைத்தால்...”

இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் எனக்குப் பாடம் சொல்லித்தந்தவர். அதைச் சொன்னால் தப்பாகிவிடுமோ என்று சுற்றிவளைத்துச் சொல்கிறார். “நல்லா இருக்கீங்களா ஐயா! பார்த்து ரொம்ப நாள் ஆச்சா.. அதான் அடையாளம் தெரியலை. அதுவும் நீங்க ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்க வேற. நீங்க கத்துக்குடுத்த தமிழும் மேடைப்பேச்சுத்திறனும்தான்யா என்னை இங்க உக்காத்தி வெச்சிருக்கு.”

“ஐயா... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. உங்க உழைப்பும் நேர்மையும்தான்யா உங்களை உயர்த்தியிருக்கு.”

அவர் பையனிடமிருந்து சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்தேன். அவர் சொன்னது நிஜம். பையன் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். எம்.·பில். படிப்பல், சங்க இலக்கியத்தில் ஒப்பாய்வு செய்திருந்தான். இப்படிப்பட்டவனுக்கு கண்டிப்பாக வேலை கொடுக்கலாம்.

ஆனால், நான் திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக் கொண்டேன். சிபாரிசு செய்யாவிட்டால் ஐயா மனசு சங்கடப்படும். பன்னிரண்டு ஆண்டு காலம் என் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். அதை எண்ணும்போது இது மிகச் சிறிய உதவிதான். ஆனால், இதைச் செய்தால் நான் மூன்று மாதங்களாக மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விடும். என் மனசாட்சியே என்னை உறுத்தும். முடிவாக அவர்களை நோக்கி, “ஐயா... எப்ப ஊருக்குப் போறீங்க?”

“வேலை முடிஞ்சா இன்னிக்கே போயிடுவேங்க.”

“இல்ல... இது கல்வி இலாகா சம்பந்தப்பட்ட விஷயம். எதுக்கும் அந்த மந்திரியைப் பார்த்துப் பேசிட்டுச் சொல்றேனே.”

அவர் மெளனம் காத்தார்.

“நீங்க ஒண்ணு பண்ணுங்க. நாளைக்கு காலையிலே தம்பி மட்டும் கோட்டைக்கு வந்து என்னைப் பார்க்கட்டும். ஐயா... நீங்க வந்து கஷ்டப்படவேண்டாம். என்னால முடிஞ்சதை கண்டிப்பா செய்யறேன்.” எழுந்து விடை கொடுத்தேன்.

எப்படியோ பிரச்சனையை ஒரு நாள் தள்ளிப்போட்டுவிட்டேன். நாளைக்கு காலையில் இளைஞனிடம் என்ன சொல்வது? தெரியவில்லை.

சொன்னபடி இளைஞன் பத்து மணிக்குக் கோட்டைக்கு வந்துவிட்டான். உள்ளே வரச்சொல்லி அமரச் சொன்னேன். அமர்ந்ததும் நான் பேச்சை ஆரம்பிக்கும் முன் அவனாக ஒரு லெட்டரை என்னிடம் கொடுத்தான்.

“என்ன இது?”

“சார், எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு சின்ன உதவியை நீங்கள் செய்யவேண்டும். இது மிகவும் ரகசியமாக இருக்கவேண்டும். எங்கப்பாவுக்குக்கூடத் தெரியக்கூடாது. தயவுசெய்து நான் போன பிறகு இதைப் படியுங்கள். மீண்டும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.. தயவுசெய்து இதை எனக்காகச் செய்யவும் - ரகசியமாக.”

எனக்கு எரிச்சலாக இருந்தது. நேற்று கேட்டதற்கே பதில் சொல்லமுடியவில்லை. புதிதாக இது வேறு. ஆனால், அவன் முகத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. கவரை வாங்கிக் கொண்டேன். என்ன உதவி கேட்டிருப்பான், அதுவும் ரகசியமாக அப்பாவுக்குக் கூட தெரியாமல். எது எப்படி இருந்தாலும் நேற்று என் ஆசிரியர் கேட்ட உதவிக்கு முதலில் என் முடிவைச் சொல்லிவிடவேண்டும்.

“தம்பி... நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்க. நான் உங்கப்பாவுக்குப் பல வகையிலும் கடமைப்பட்டவன். அவர் கேட்ட உதவியும் என்னால் செய்யக்கூடியதுதான். உங்களுக்கும் அந்த வேலைக்கான எல்லா தகுதியும் இருக்கிறது. ஆனால், நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் முன்ன மாதிரி இல்ல தம்பி. இந்தத் தடவை வந்ததிலிருந்து நான் அஞ்சு பைசாகூட வாங்கறதில்லே. அதே மாதிரி யாருக்கும் சிபாரிசும் செய்யறதில்லே. ஏதோ கடைசி காலத்தில் மக்களுக்கு உண்மையா உழைக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு உதவமுடியலையேன்னு எனக்கு வருத்தம்தான் தம்பி. இதை நேத்தே சொல்லியிருப்பேன். ஐயாகிட்டே இதை என்னாலே சொல்ல முடியலை தம்பி. அவரால தாங்க முடியாது. அவரு எங்கிட்ட உதவி கேட்டு வர்றதுக்கே எவ்வளவு யோசிச்சிருப்பாருன்னு எனக்குத் தெரியும். அதான் சொல்லலை. நீங்க அப்படியில்லை. படிச்சவர். இளைஞர். என் நிலைமையைப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன். உங்களைப் பார்த்தா நல்ல விடாமுயற்சியுடையவர்னு தெரியுது. தொடர்ந்து முயற்சி செய்யுங்க. கண்டிப்பா உங்களுக்கு என் உதவியில்லாமலே வேலை கிடைக்கும். என்னால முடிஞ்சது, உங்களுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிறதுதான். தயவுசெய்து நான் இப்படிச் சொன்னேன்னு நீங்களும் யார்கிட்டேயும், முக்கியமா ஐயாகிட்டே இப்ப சொல்லாதீங்க. கடவுள் கருணையால உங்களுக்கு இந்த வேலையே என் சிபாரிசு இல்லாமலே கிடைச்சுட்டா அப்புறம் வேணும்னா சொல்லுங்க. வேலை கிடைக்க என் வாழ்த்துக்கள்.”

இளைஞன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. வணக்கம் சொல்லிவிட்டுப் போகத் திரும்பினான். “தம்பி, இந்தாங்க, நீங்க கொடுத்த லெட்டர். இதுல நீங்க எதைக் கேட்டிருந்தாலும் என்னால செய்யமுடியாது. மன்னிச்சுடுங்க” லெட்டரை நீட்டினேன். அவன் வாங்கவில்லை. தயங்கித் தயங்கிச் சொன்னான். “சார், எங்க அப்பா கேட்டதை செய்யமுடியாவிட்டாலும் நான் கேட்டதை கண்டிப்பா உங்களால செய்ய முடியும். தயவுசெய்து நான் போன பிறகு படிச்சுப் பாருங்க. நான் சொல்றது எவ்வளவு உண்மைனு உங்களுக்கே புரியும்.” போய்விட்டான்.

அந்த இளைஞன் கொடுத்த கடித கவரைக் கிழித்து உள்ளே எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்தேன். ஒரு முறையல்ல... பல முறை. ஆம்... அந்த இளைஞன் சொன்னது சரிதான். என்னால் அவன் கேட்டுள்ளதை கண்டிப்பாகச் செய்ய முடியும். அதைச் செய்வதில் எனக்கு சங்கடம் இல்லை. பெருமைதான்! கடிதத்தைப் படித்தால் உங்களுக்கே புரியும்.

‘ஐயா,
எங்கள் குடும்ப வறுமை காரணமாக என் தந்தை உங்களை வந்து சந்தித்து சிபாரிசு கேட்க வேண்டியதாகிவிட்டது. எனக்கு வேலை கிடைக்கும் என பொறுத்துப் பொறுத்து வெறுத்துப் போய்த்தான் கடைசியில் உங்களிடம் சிபாரிசுக்காக வந்தார். அவருக்கு என் திறமை பேரில் நம்பிக்கை போய்விட்டது. சிபாரிசு இல்லாமல் எனக்கு வேலை கிடைக்காது என்று முடிவு கட்டிவிட்டார். ஆனால், எனக்கு இன்னமும் என் படிப்பு மீதும் என் திறமை மீதும் நம்பிக்கை இருக்கிறது. யாருடைய சிபாரிசும் இல்லாமலேயே எனக்கு வேலை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த வேலை இப்போது கிடைக்காவிட்டாலும் கண்டிப்பாக கூடிய விடைவில் கிடைக்கும் . அதுவரையில் நம்பிக்கை இழக்காமல் வேறு வேலை செய்ய முடிவு செய்துவிட்டேன். அப்பா மனது நோகக்கூடாதே என்றுதான் நேற்று இதுபற்றி எதுவும் பேசவில்லை. தயவுசெய்து இந்த வேலைக்காக எனக்கு எந்த சிபாரிசும் செய்ய வேண்டாம். உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கியதற்கு என்னை மன்னிக்கவும்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இளஞ்செழியன்.’

Tuesday, March 1, 2011

தமிழக மீனவர்களின் சமூக பொருளாதார உண்மை நிலை

தமிழக மீனவர்களின் சமூக பொருளாதார உண்மை நிலை என்ன என்பதை பற்றி இங்கு இருக்கும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அக்கறை என்பது துளி கூட இல்லை என்பது தான் உண்மை. (நடிகர் நடிகர் விஜய் பற்றி கடைசியாக பேசுவோம்).

அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியாக இருந்தாலும் மீனவனைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். ஏனென்றால் அவர்களுக்கு மீனவனைப் பற்றிய நினைப்பே சிங்களவன் அவர்களில் ஒருவனை கொன்றாலோ அல்லது அவர்களில் பலரை அடித்துக் காயப்படுத்தினாலோ, அல்லது அவர்களை சிறைபிடித்தாலோ தான் வரும். பிறகு ஒரு சில தினங்களில் அவனை மறந்து விடுவார்கள்.

ஆனால் மீனவர்களின் உண்மையான நிலை என்ன தெரியுமா? மீனவர்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரை விடக் கீழான நிலையில் தான் இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது தான் உண்மை. கீழே உள்ளவற்றை படியுங்கள் உங்களுக்கே தெரியும்.

1. தமிழக மீனவர்களில் எத்தனை பேர் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளில் உள்ளார்கள் தெரியுமா?
பூஜ்யம் யாராவது அப்படி இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

2. தமிழக மீனவர்களில் எத்தனை பேர் மருத்துவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா?
பத்து அல்லது இருபது. அதற்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

3. தமிழக மீனவர்களில் எத்தனை பேர் பொறியியல் வல்லுனர்களாக இருக்கிறார்கள் தெரியுமா?
தெருவுக்கு 10 பேர் 20 பேர் இருந்தாலும், மீனவர்களைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் சேர்த்து நூறு அல்லது இருநூறு பேருக்கும் கீழ் தான். அதற்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

4. தமிழக மீன்வர்களில் எத்தனன பேர் அரசு வேலையில் உள்ளார்கள் தெரியுமா?
நூறு அல்லது இருநூறுக்கும் கீழ் தான். இது கட்டாயம் அரசாங்கத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். அறிவிக்க அவர்கள் தயாரா?

5. தமிழக மீன்வர்களில் எத்தனை பேர் மந்திரியாக, எம்.எல்.ஏ.வாக அல்லது எம்.பி யாக இருக்கிறார்கள்?
எம்.ஜி.ஆர் காலத்தில் திரு.கலைமணி என்பவர் மந்திரியாக இருந்தார். பிறகு கலைஞரின் திமுக ஆட்சியில் திரு.மதிவாணன் அவர்கள் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அடுத்து ஜெயலலிதாவின் ஆட்சியில் திரு.டி.ஜெயக்குமார் மந்திரியாக இருந்தார். இப்பொழுது மீண்டும் திமுக ஆட்சியில் திரு.சாமி அவர்கள் மந்திரியாக இருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் ஒருவர் அல்லது இருவர் தான் மீனவ சமூகத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு கடனே என்று மந்திரி பதவி கொடுப்பார்கள். பெரும்பாலும் மீன்வளத் துறைதான். இதற்கு விதிவிலக்கு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்ற திரு.டி.ஜெயக்குமார் (கடந்த ஆட்சியில் அவர் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார்). ஒரு வேளை மீனவனுக்கு வேறு ஒன்றும் தெரியாது என்று அவர்களே முடிவு செய்து விட்டார்களோ என்னவோ.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் மீனவர்களிடையே விழிப்புணர்வு இன்மை தான். அவர்களுக்கு என்று போராடவோ, அல்லது அவர்களின் உரிமையை அரசுத்துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் எடுத்துச் சொல்லி பெறவோ, சொல்லிக் கொள்ளும்படியான தலைவர்கள் இல்லை. இதனை ஆளுவோர்கள் தங்களுக்குச் சாதகமான அம்சமாக எடுத்துக் கொண்டு அவர்களை தலைமுறை தலைமுறையாக அதே நிலையிலேயே வைத்துள்ளனர்.

திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் மீனவனுக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டால், அவனுக்கு வலை வாங்கிக் கொடுத்தோம், படகு வாங்கிக் கொடுத்தோம், என்று தான் சொல்கிறார்களே தவிர, அவர்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றதிற்கோ, அவர்களின் சமூக முன்னேற்றத்திற்கோ எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் தீட்டியதாக சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

பாமகவின் போராட்டத்திற்கு பிறகு வன்னியர்களுக்காக மிகவும் பின் தங்கிய வகுப்பை ஏற்படுத்திய போது அதில் மனசு வந்து மீனவர்களையும் சேர்த்தது ஒன்று தான் அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் செய்த மிகப் பெரிய சாதனை. அது கூட நெல்லுக்கு பாய்ந்த நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்தது போலத்தானே ஒழிய வேறொன்றும் இல்லை. அதைக் கூட பொறுக்காத பாமக மீனவர்களைச் சேர்ப்பதைக் கூட அப்போது எதிர்த்தது, பின்னர், அவர்களைச் சேர்ப்பதனால் ஒன்றும் குடிமுழுகிவிடாது, அவர்களால் வன்னியர்களுடன் போட்டியிட முடியாது என்று உணர்ந்ததாலோ என்னவோ, அவர்களும் மிகவும் பிற்பட்டவர் பட்டியலில் இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் கூட மேலே சொன்னக் கணக்கை விட அதிக எண்ணிக்கையில் தான் படித்தவர்களும், பதவியில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். இதை மறுக்க எந்த அரசாலும் முடியாது, ஏனென்றால் அது தான் உண்மை.

இப்பொழுது அரசுத்துறையினருக்கும், அரசியல்வாதிகளுக்கும், மற்றும் இப்பதிவை படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மேலே சொன்ன புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒன்று அதனை ஏற்றுக் கொண்டோ அல்லது அதற்கு மாறுபட்டோ உங்களால் பதில் சொல்ல முடியுமா? மேலே சொன்னவை அனைத்தும் உண்மையாகும் பட்சத்தில் மீனவர்களுக்கு அவர்களின் உண்மை நிலையினை கருத்தில் கொண்டு அவர்களை தாழ்த்தப்பட்ட பழங்குடியினராக அறிவிக்க தயாரா? (பல மாநிலங்களில் மீனவர்கள் பழங்குடிகளாகத்தான் உள்ளனர்.) அப்படி அறிவிக்க முடியாது என்றால் அதற்கான காரணத்தை, அதாவது மீனவன் இந்த இந்த வகையில் முன்னேறி விட்டான் என்பதையாவது தெரிவிக்க தயாரா? என்னுடைய இந்த சவாலை ஏற்க எந்த கட்சி தயாராக உள்ளது?

சரி கடைசியாக இப்போது நடிகர் விஜய் பற்றி பேசுவோம். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளைக் கூட நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நடிகர்கள் அடிக்கும் இத்தகைய ஸ்டண்டுகளை எல்லாம் இந்தக் காதில் கேட்டு அந்தக் காதில் விட்டு விடவேண்டும். இதற்கெல்லாம் பதிவெழுதி உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கக் கூடாது.

Monday, February 21, 2011

லஞ்ச நீதி - 2. மின்வாரியம்

லஞ்சம் என்ற வார்த்தையைச் சொன்னாலே நினைவுக்கு வரும் பல துறைகள் இருக்க, எடுத்தவுடன் மின்சார வாரியம் என்று கூறுகிறேனே என்று யோசிக்காதீர்கள். என்னைப் பொருத்தவரை லஞ்சம் எவ்வளவு வாங்கப்படுகிறது என்பது எப்படி முக்கியமோ அப்படித்தான் எந்த வழியில் வாங்கப்படுகிறது என்பதும்.

நாம் லஞ்சம் தான் கொடுக்கிறோம் என்பது தெரியாமலே நம்மில் 99% சதவிகிதம் பேர் மின்சார வாரியத்தில் வேலை செய்பவருக்கு லஞ்சம் கொடுத்து வருகிறோம் தெரியுமா? மீதி 1% எப்படி தப்பித்தார்கள் என்பதை கடைசியில் விளக்குகிறேன்.

முதலில் மின் வாரியத்தில் நாம் எப்படி நம்மையறியாமல் லஞ்சம் கொடுக்கிறோம் என்று பார்ப்போம். ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார கணகீட்டு அளவைக் குறிக்க ஒரு அட்டை கொடுப்பார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளாக (சுமார் 20 - 25 வருடமாக) அந்த அட்டையின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது. அதில் ஒரு வருடத்திற்கான அளவுகளை குறிக்க ஏதுவாக 12 வரிகள் மட்டுமே இருக்கும். இது ஏறக்குறைய இரு அஞ்சல் அட்டை அளவு தான் இருக்குமென்பதால் இதை அச்சடிக்க 2 ரூபாயோ அல்லது 3 ரூபாயோ ஆகக் கூடும். (அது எவ்வளவு ஆனால் என்ன?) ஆனால் இதை மின்சார வாரியம் இலவசமாக அச்சிட்டுக் கொடுக்கிறது. (அப்படித்தான் சொல்கிறார்கள்.) ஆனால் நான் முன்பே சொன்னது போல் எனக்கு நினைவு தெரிந்த நாளாக ஒவ்வொரு வருடமும் புதிய அட்டை போடுவதற்கு கணக்கு எடுக்க வருபவரிடம் காசு (அப்போது ரூ.2 - இப்போது ரூ.5) கொடுத்தால் தான் புதிய அட்டை கொடுப்பார். இல்லையென்றால் பழைய அட்டையில் மூலை முடுக்கெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். இந்த மாத கணக்கை எங்கே எழுதியிருக்கிறார் என்று நாம் கண்டு பிடிப்பதற்குள் மண்டை தீய்ந்து விடும். இதற்கு பயந்து கொண்டே அனைவரும் காசு போனால் போகிறது என்று கொடுத்து புது அட்டை வாங்கி விடுவார்கள். இதுதான் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் கணக்கெடுக்கும் கணக்காளருக்கு ஏறக்குறைய ரூ.5000 வரை (அதாவது 1000 வீடுகளில் ரூ.5) கிடைக்கும். இந்த லஞ்சம் (அப்படிச் சொல்லக் கூடாது - அது கார்டு அளிக்க சேவைக் கட்டணம்) தமிழகம் முழுவதும் பெறப்படுகிறது. ஆனால் நாமும் இதை லஞ்சமாக நினைப்பதே இல்லை என்பது தான் உண்மை. இப்படி காலங்காலமாக நாமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம், அவர்களும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரசாங்கம் இலவசமாக கொடுக்கச் சொல்லி கொடுப்பதை இவர்கள் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இதனை நிறுத்த வழியே இல்லையா என்றால், இருக்கிறது. அஞ்சல் அட்டையை அரசாங்கம் 50 பைசா என்று விலைக்கு விற்பது போல் இந்த கார்டுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்கலாமே. அப்போது எல்லோரும் ஒழுங்காக அந்த விலை கொடுத்து வாங்குவார்கள் அல்லவா? எங்கு இலவசம் கொடுக்கப்படுகிறதோ அங்கு லஞ்சம் ஆரம்பமாகிறது என்பது இதன் மூலம் தெரிகிறதல்லவா. அரசாங்கம் அந்த கார்டின் விலையை ரூ.1 என்றோ அல்லது ரூ.2 என்றோ விலை நிர்ணயம் செய்தால் உண்மையில் நமக்கு லாபம் தானே ஒழிய நஷ்டம் இல்லை. ஏனென்றால் ரூ.5 லஞ்சமாக கொடுப்பதை விட ரூ. 2 கொடுத்து நாம் உரிமையோடு வாங்கலாமே.

உண்மையில் நாம் ரூ.5 வரை லஞ்சம் கொடுத்து கார்டு கேட்டாலும் அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க மாட்டார்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பழைய அட்டையில் எல்லாப் பக்கத்திலும் கிறுக்குவார்கள். அப்போதுதானே நாம் லஞ்சம் கொடுத்தாலும் பரவாயில்லை என்று நினைப்போம். இப்படி நாம் காசையும் கொடுத்து அவர்களிடம் கார்டுக்கும் மன்றாட வேண்டும். இலவசம் எப்படி லஞ்சத்தை வளர்ப்பதோடு அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அரசுத்துறையினரின் அராஜக போக்கிற்கும் வழி வகுக்கிறது பார்த்தீர்களா?

ஆனால் இந்த லஞ்சத்தை ஒழிக்கும் எண்ணம் ஏனோ மின்துறை அமைச்சருக்கும் அத்துறை உயர் அதிகாரிகளுக்கும் இது வரை எழவில்லை. ஒருவேளை அவர்கள் விரும்பினாலும் அத்துறையில் பலம் பொருந்தியதாக இருக்கும் தொழிற்சங்கங்கள் இதை எதிர்க்கின்றனவோ என்னவோ? (ஊழியர் நலம் விரும்பிகள் அல்லவா அவர்கள்)

அப்புறம் முதலில் சொன்ன விஷயத்திற்கு வருவோம். அதாவது மீதம் உள்ள 1% சதவிகிதம் பேர் எப்படி காசு கொடுக்காமல் அட்டை பெறுகிறார்கள் என்று. அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதற்கு நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவரோ, நண்பரோ, உறவினரோ மின் வாரியத்தில் வேலை செய்தால் போதும்.

Monday, February 14, 2011

லஞ்ச நீதி - 1. அவசர கால லஞ்சம்

லஞ்ச நீதி - 1. அவசர கால லஞ்சம்

நாட்டில் ஒரே ஒரு விசயம் ஏறக்குறைய பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் அது லஞ்சம் ஒன்று தான். என்னடா இப்படி சொல்கிறேனே என்று எண்ணாதீர்கள். இன்றைக்கு லட்சம் கோடிகளில் லஞ்சம் வாங்கிய நிகழ்வுகளைப் பற்றிப் படிக்கும் போது அதை எதிர்த்து எரிமலையாய் வெடிப்பவர்கள் கூட தங்களின் வாழ்வில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கண்டிப்பாக ஆளாகியிருப்பார்கள்.

நீங்கள் கேட்கலாம் லஞ்சம் கொடுப்பது வேறு வாங்குவது வேறு என்று. உண்மைதான். ஆனால் கொடுப்பவர் இருப்பதால் தானே லஞ்சம் வாங்கப்படுகிறது. நீங்கள் தரமாட்டேன் என்று சொன்னால் அவரால் எப்படி வாங்கமுடியும். ஆனால் தரமாட்டேன் என்று சொல்லுவது பல நேரங்களில் மிகவும் எளிதாகத் தோன்றினாலும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும், அப்படி வெறுமனே லஞ்சம் கொடுக்காமல் தங்களின் செயல்களை செய்ய முடியாது.

இது ஒரு வகையில் பார்க்கப் போனால் வள்ளுவரின் 'பொய்மையும் வாய்மை இடத்து' போன்றது தான். எப்படி என்றால் ஒருவன் விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் நிலையில் அரசு மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்கப்படும் போதோ, அல்லது ஒருவனுக்கு அவசரமாக ரத்தம் கொடுக்க செல்லும் போது போக்குவரத்து விதிகளை மீறியதற்கு பிரதிபலனாக காவலரால் லஞ்சம் கேட்கப்படும் போதோ, நீங்கள் கொடுக்கமாட்டேன் என்று கூறினால் ஏற்படும் கால விரயம் ஒருவரின் உயிரையே போக்கிவிடக்கூடும் என்பதால் அந்த நேரங்களில் நீங்கள் லஞ்சம் கொடுப்பதின் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்பதால், லஞ்சம் கொடுப்பதில் தவறேதும் இருக்க முடியாது. இந்த இடத்தில் இது 'பொய்மையும் வாய்மை இடத்து' என்பதற்கு சமானமாகக் கொள்ளலாம்.

ஆனால் அதே நேரம் வாழ்வில் வசதிகள் மிகக் கொண்டவர்கள் தங்களின் தவறுகளை மறைப்பதற்கோ, அல்லது தங்களுக்கு நேர்வழியில் கிடைக்கக் கூடாத சலுகைகளைப் பெறுவதற்கோ கொடுக்கப்படும் லஞ்சமானது கண்டிப்பாக குற்றமே யாகும். அது ஐந்து ரூபாயாக இருந்தாலும் சரி, ஐம்பது லட்சம் கோடியாக இருந்தாலும் சரி.

தாங்கள் லஞ்சம் கொடுப்பதற்கோ, வாங்குவதற்கோ ஒவ்வொருவரும் மேற்படி சாக்கு போக்குகளை கண்டிப்பாக வைத்துள்ளார்கள் என்பது என்னவோ நூற்றுக்கு நூறு சரிதான். சில சமயம் அவர்கள் சொல்லும் காரணங்கள் நம்மை பதில் பேச முடியாமல் கூட செய்துவிடும். ஆனால் இதனாலெல்லாம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சரியென்று ஆகிவிடாது.

லஞ்ச கொடுப்பது தவறு, ஆனால் அதே சமயத்தில் அவசர அவசியம் ஏற்பட்டால் லஞ்சம் கொடுத்தாலும் தவறில்லை, என்று இரு முரண்பட்ட கருத்துக்களை கூறுகிறீர்களே என்று நீங்கள் வினவலாம். பார்வைக்கு முரண் போல் தோன்றினாலும், இது தான் நடைமுறை உண்மை. லஞ்சம் கொடுப்பது தவறு என்று அடித்துக் கூறுபவர் கூட அவசர காலங்களில் லஞ்சம் கொடுக்க நேரிடுகிறது.

இங்கே ஒரு உண்மையை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பது தவறு என்று உண்மையாக நினைப்பவர்கள், அவசர காலங்களில் லஞ்சம் கொடுக்க நேர்ந்தாலும், எந்த சமயத்திலும் லஞ்சம் வாங்குவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். என்ன இவர்களின் எண்ணிக்கை இவர்களின் கருத்துக்கு நேர்மாறான கொள்கையுடையவர்களின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவு என்பது தான் நிதர்சனம்.

சரி இப்படியே அவசர காலங்களில் மட்டுமே ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுக்க முனைந்தால் கூட, லஞ்சத்தை ஒழிக்கவே முடியாதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆமாம் என்ன செய்வது, முற்றிலும் புரையோடிய இந்த நோயை ஒரு நாளிலோ, ஒரு நடவடிக்கையினாலோ, அல்லது ஒரே சட்டத்தின் மூலமோ நீக்கிவிட முடியாதல்லவா. படிப்படியாகத்தானே ஒழிக்க வேண்டும்.

இனி வரும் பகுதிகளில் சாமான்ய மக்கள் எதிர்கொள்ளும் லஞ்ச அனுபவங்களையும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், அத்தகைய லஞ்ச நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாகக் காண்போம்.

Thursday, February 10, 2011

தேர்தல் வாக்குறுதிகள் - 1: பெட்ரோலுக்கு தமிழக அரசின் வரி ரத்து

அடுத்து வர உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிப்பது சம்பந்தமாக எனது முந்தைய பதில் சில (நகைச்சுவையான) ஆலோசனைகளை கூறியிருந்தேன்.

உண்மையிலேயே அரசியல் கட்சிகளுக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர்களுக்கு உதவும் நோக்கில் நாமும் சற்று தீவிரத்துடன் ஆலோசனை கூறினால் என்ன என்று தோன்றியது. அதன் முதல் படியாக இந்த பதிவை எழுதுகிறேன். இனிமேலும் தொடர்ந்து இது போன்ற எண்ணங்கள் தோன்றினால் எழுதுவதற்கு வசதியாக இதன் தலைப்பிற்கு ஒன்று என எண்ணமிட்டுள்ளேன். இனி வாக்குறுதி குறித்து காண்போம்.

இன்று அனைத்து பொருள்களின் இமாலய விலைவாசி உயர்வுக்கும் காரணம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகவே அரசியல் கட்சிகளுக்கும் இது தெரிந்திருக்கும் என நம்புவோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் 30% சதவிகித வரி. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19 அதிகமாகிறது.

உண்மையிலேயே தமிழக மக்களின் மனங்களை கவர விரும்பும் அரசியல் கட்சி தைரியமாக தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்த வரியை முற்றிலுமாகவோ அல்லது பாதி அளவாகவோ குறைப்பதாகவும், இதன் மூலம் ரூ.10 முதல் ரூ.20 வரை பெட்ரோல் விலை தமிழகத்தில் மட்டும் குறையும் எனவும் அறிவிக்கலாம். இது இலவச அறிவிப்புகளை விட மக்களின் மனங்களை கட்டாயம் கவரும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, February 9, 2011

வாக்காளர்களுக்கு எதை இலவசமாக கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் சொல்லலாம்?

இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் உள்ளவர்களின் எண்ண ஓட்டங்களில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் வாக்காளர்களை எப்படியெல்லாம் தங்களின் தேர்தல் அறிக்கையின் மூலம் கவரலாம் என்பதுதான்.

சென்ற சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அறிவிப்பு தான் திமுகவுக்கு கடைசி நேரத்தில் வெற்றி அளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே அடுத்து வரும் தேர்தலில் என்ன வாக்குறுதியைக் கொடுத்து வாக்காளர்களை கவருவது என்று அனைத்து கட்சியினரும் முடியைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்.

ஏதோ நம்மால் முடிந்தது அவர்களுக்கு சில யோசனைகளை சொல்லி வைப்போமே? உதாரணமாக கீழ்க்கண்ட வாக்குறுதிகளை அவர்கள் அளிக்கலாம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்....

-வீட்டிற்கு இரு கைப்பேசிகள்
-வீட்டிற்கு ஒரு இண்டக்சன் அடுப்பு (அதுதாங்க கரண்ட் அடுப்பு)
(கரண்டே இல்லையென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல)
-வீட்டிற்கு ஒரு இன்வர்ட்டர் (கரண்ட் இல்லை என்று யாரும் சொல்லமுடியாது)
-வீட்டிற்கு ஒரு தையல் மிஷின்
-வீட்டிற்கு ஒரு கணிப்பொறி/மடிக்கணினி
-வீட்டிற்கு ஒரு இரு சக்கர வாகனம்

இவை கொடுத்தாலும் ஓட்டு கிடைக்குமா என்று சந்தேகமிருந்தால் இதனை வாக்குறுதியாக கொடுக்கலாம்.

-வீட்டிற்கு ஒரு நானோ கார்.

உங்களுக்கும் ஏதாவது யோசனை தோன்றினால் சொல்லுங்களேன், தமிழக அரசியல் கட்சிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

தமிழக மீனவர்களின் ஒரே எதிரியும், பல துரோகிகளும்

தமிழக மீனவர்களின் ஒரே எதிரி யார் என்றால் பச்சை குழந்தை கூட பளிச் சென்று சொல்லிவிடும் சிங்கள ராணுவ வீரர்கள் என்று. ஆனால் மீனவர்களுக்கு எதிரான துரோகிகளுக்கோ பஞ்சமில்லை. அவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழகத்திலேயே பல்வேறு அரசியல்கட்சிகளாக பிரிந்திருந்தாலும், மீனவர்களுக்கு (மனப்பூர்வமாக) உதவுவதில் மட்டும் அவர்கள் ஒருவருக்கு மற்றவர் சலைத்தவர்களில்லை.

இனிமேல் ஒரு மீனவன் சுடப்பட்டு செத்தால் கூட திமுக தன்னுடைய மத்திய அமைச்சர்களை வாபஸ் வாங்கிக் கொள்ளும், அதிமுக தன்னுடைய அனைத்து எம்.பிக்களையும் வாபஸ் பெற்றுவிடும், மத்திய காங்கிரஸ் அமைச்சர்களான ப.சிதம்பரமும், ஜி.கே. வாசனும் பதவி விலகிவிடுவார்கள், ஐயா ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராஜ்யசபா தேர்தலில் நிற்கவே மாட்டார் என்று அறிவித்து விடுவார், ஈவிகேஎஸ் இளங்கோவனும், சுப்ரமணியன் சுவாமியும் இனிமேல் பத்திரிகைக்கு பேட்டியே கொடுக்கமாட்டோம் என்று அறிவித்துவிடுவார்கள்.

ஆகவே யாராவது போய் ராஜபக்சேவிடம் சொல்லுங்கள் மேலே சொன்னவையெல்லாம் நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் தமிழக மீனவனைச் சுடுவதை உடனே நிறுத்துங்கள் என்று!