Monday, February 14, 2011

லஞ்ச நீதி - 1. அவசர கால லஞ்சம்

லஞ்ச நீதி - 1. அவசர கால லஞ்சம்

நாட்டில் ஒரே ஒரு விசயம் ஏறக்குறைய பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் அது லஞ்சம் ஒன்று தான். என்னடா இப்படி சொல்கிறேனே என்று எண்ணாதீர்கள். இன்றைக்கு லட்சம் கோடிகளில் லஞ்சம் வாங்கிய நிகழ்வுகளைப் பற்றிப் படிக்கும் போது அதை எதிர்த்து எரிமலையாய் வெடிப்பவர்கள் கூட தங்களின் வாழ்வில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கண்டிப்பாக ஆளாகியிருப்பார்கள்.

நீங்கள் கேட்கலாம் லஞ்சம் கொடுப்பது வேறு வாங்குவது வேறு என்று. உண்மைதான். ஆனால் கொடுப்பவர் இருப்பதால் தானே லஞ்சம் வாங்கப்படுகிறது. நீங்கள் தரமாட்டேன் என்று சொன்னால் அவரால் எப்படி வாங்கமுடியும். ஆனால் தரமாட்டேன் என்று சொல்லுவது பல நேரங்களில் மிகவும் எளிதாகத் தோன்றினாலும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும், அப்படி வெறுமனே லஞ்சம் கொடுக்காமல் தங்களின் செயல்களை செய்ய முடியாது.

இது ஒரு வகையில் பார்க்கப் போனால் வள்ளுவரின் 'பொய்மையும் வாய்மை இடத்து' போன்றது தான். எப்படி என்றால் ஒருவன் விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் நிலையில் அரசு மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்கப்படும் போதோ, அல்லது ஒருவனுக்கு அவசரமாக ரத்தம் கொடுக்க செல்லும் போது போக்குவரத்து விதிகளை மீறியதற்கு பிரதிபலனாக காவலரால் லஞ்சம் கேட்கப்படும் போதோ, நீங்கள் கொடுக்கமாட்டேன் என்று கூறினால் ஏற்படும் கால விரயம் ஒருவரின் உயிரையே போக்கிவிடக்கூடும் என்பதால் அந்த நேரங்களில் நீங்கள் லஞ்சம் கொடுப்பதின் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்பதால், லஞ்சம் கொடுப்பதில் தவறேதும் இருக்க முடியாது. இந்த இடத்தில் இது 'பொய்மையும் வாய்மை இடத்து' என்பதற்கு சமானமாகக் கொள்ளலாம்.

ஆனால் அதே நேரம் வாழ்வில் வசதிகள் மிகக் கொண்டவர்கள் தங்களின் தவறுகளை மறைப்பதற்கோ, அல்லது தங்களுக்கு நேர்வழியில் கிடைக்கக் கூடாத சலுகைகளைப் பெறுவதற்கோ கொடுக்கப்படும் லஞ்சமானது கண்டிப்பாக குற்றமே யாகும். அது ஐந்து ரூபாயாக இருந்தாலும் சரி, ஐம்பது லட்சம் கோடியாக இருந்தாலும் சரி.

தாங்கள் லஞ்சம் கொடுப்பதற்கோ, வாங்குவதற்கோ ஒவ்வொருவரும் மேற்படி சாக்கு போக்குகளை கண்டிப்பாக வைத்துள்ளார்கள் என்பது என்னவோ நூற்றுக்கு நூறு சரிதான். சில சமயம் அவர்கள் சொல்லும் காரணங்கள் நம்மை பதில் பேச முடியாமல் கூட செய்துவிடும். ஆனால் இதனாலெல்லாம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சரியென்று ஆகிவிடாது.

லஞ்ச கொடுப்பது தவறு, ஆனால் அதே சமயத்தில் அவசர அவசியம் ஏற்பட்டால் லஞ்சம் கொடுத்தாலும் தவறில்லை, என்று இரு முரண்பட்ட கருத்துக்களை கூறுகிறீர்களே என்று நீங்கள் வினவலாம். பார்வைக்கு முரண் போல் தோன்றினாலும், இது தான் நடைமுறை உண்மை. லஞ்சம் கொடுப்பது தவறு என்று அடித்துக் கூறுபவர் கூட அவசர காலங்களில் லஞ்சம் கொடுக்க நேரிடுகிறது.

இங்கே ஒரு உண்மையை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பது தவறு என்று உண்மையாக நினைப்பவர்கள், அவசர காலங்களில் லஞ்சம் கொடுக்க நேர்ந்தாலும், எந்த சமயத்திலும் லஞ்சம் வாங்குவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். என்ன இவர்களின் எண்ணிக்கை இவர்களின் கருத்துக்கு நேர்மாறான கொள்கையுடையவர்களின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவு என்பது தான் நிதர்சனம்.

சரி இப்படியே அவசர காலங்களில் மட்டுமே ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுக்க முனைந்தால் கூட, லஞ்சத்தை ஒழிக்கவே முடியாதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆமாம் என்ன செய்வது, முற்றிலும் புரையோடிய இந்த நோயை ஒரு நாளிலோ, ஒரு நடவடிக்கையினாலோ, அல்லது ஒரே சட்டத்தின் மூலமோ நீக்கிவிட முடியாதல்லவா. படிப்படியாகத்தானே ஒழிக்க வேண்டும்.

இனி வரும் பகுதிகளில் சாமான்ய மக்கள் எதிர்கொள்ளும் லஞ்ச அனுபவங்களையும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், அத்தகைய லஞ்ச நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாகக் காண்போம்.

No comments: